Thursday 16 July 2015

பாகுபலி

பாகுபலி.......
வாரத்தின் முதல் நாளில் எந்த தியேட்டரிலும் சினிமா பார்த்திராத எனக்கு நேற்று (திங்கள் கிழமை) தேவி தியேட்டரில் நிறைந்திருந்த மக்கள் கூட்டம் முதல் ஆச்சர்யம். வெற்றிப்பட இயக்குனர் என்ற முத்திரையும், டிரெய்லரில் வெளிப்பட்ட படத்தின் பிரம்மாண்டமும், படம் பற்றிய பரபரப்பான செய்திகளும் மக்களின் ஆர்வத்தை தூண்டி தியேட்டருக்கு இழுத்து வந்திருப்பதில் வியப்பேதுமில்லை. பெரும்பாலும் குடும்பம் குடும்பமாக மக்களைக் காண முடிந்தது.
“தேவி பாரடைஸ்” அரங்கம் நிறைந்திருந்தது. “D"வரிசையில் நடு”நிலையாக”(!!) உட்காரும்படி சீட் கிடைத்தது படத்தை ரசிக்க வைத்த முதல் காரணம் tongue emoticon. பிரபாஸ், ராணா அறிமுகக் காட்சிகளை விட ரம்யாகிருஷ்ணன், தமன்னா, அனுஷ்கா திரையில் தோன்றும் காட்சிகளில் விசில் பறக்கிறது. (வயசானாலும் உங்க அழகும் கம்பீரமும் இன்னும் குறையல ரம்யா மேடம்ம்ம்…..♥). இல்லாத காலரை தூக்கி விட்டுப் பெருமை கொண்ட கொஞ்ச நேரத்திலேயே அந்த விசிலை சத்யராஜுக்கும், (ஒரேயொரு காட்சியில் வந்தாலும்) டைரக்டர் ராஜமௌலிக்கும் சரிசமாகப் பிரித்துக் கொடுத்து பைசல் பண்ணி விடுகின்றனர் ரசிகக் கண்மணிகள்.
தமிழ், தெலுங்கு ஹீரோயிச படங்களில் ஹீரோ ஹெலிகாப்டர் மேல் தாவுவதையும், உயரமான கட்டடத்திலிருந்து ரயில் மீது குதிப்பதையும், ராட்சச பலூன் மீது பறந்து பறந்து சண்டையிடுவதையும் பார்த்துப் பழகிப் போன நம் கண்கள் பிரபாஸ் அத்தனைப் பெரிய சிவலிங்கத்தை ஒற்றை ஆளாகத் தூக்குவதையும் …..மலை விட்டு மலை தாவுவதையும், பாறைகளை உடைப்பதையும், 100 அடி சிலை கீழே விழும் முன் அதன் கயிற்றை இழுத்து நிறுத்துவதையும், எதிராளிகளை சிதறடிப்பதையும் ஏகமனதாக மன்னித்து ஏற்றுக் கொள்கிறது. (அவ்வப்போது சிரிப்பும் வருவதை தவிர்க்கமுடியவில்லை என்பது உண்மை).
பிரபாஸை விட உயரமாகவும் உறுதியாகவும் இருக்கும் ராணா அதிக ஸ்கோர் எடுத்து ஆட்டக்கதாநாயகனாக அரும்பாடுபடுவதில் நியாயம் இருக்கவே செய்கிறது. கதைப்படி அவரின் அவசரப்புத்தியின் காரணமாக (வேறு வழியின்றி) வில்லனாக சித்தரிக்கப்பட்டாலும் ராணா ரசிக்கவே வைக்கிறார்... wink emoticon
ஹீரோக்கள் தவிர்த்து பிரதான கதாப்பாத்திரங்கள் அனைவரும் தமிழ்கூறு நல்லுலகம் அறிந்த முகங்களாயிருப்பது கூடுதல் பலம். கட்டப்பா பாத்திரத்தில் நம்ம நெட்டப்பா சத்யராஜ். ஒரே நேரத்தில் மெய்க்காப்பாளனாக வீரத்துடன் சண்டையிடுவதும் மறுநிமிடம் அடிமையாக அடக்கி வாசிப்பதுமாக அப்ளாஸ்களை அள்ளிக்கொள்கிறார். . நாசர் பாத்திரமும் ஆஸம்…ஆஸம்…தமன்னா வழக்கம் போல மெழுகுப் பொம்மை.
படத்தின் பிரம்மாண்டம் மிரட்டியிருக்கிறது. நிறைய வெளிநாட்டுப் படங்கள் பார்ப்பவர்களுக்கு இது பழகியிருந்தாலும் சராசரி சினிமா ரசிகர்களுக்கு நிச்சயம் புது அனுபவம் கிடைக்கும். வேற்றுமொழி பேசும் எதிர்படைத் தலைவன் நாக்கைச் சுழற்றிப் பேசும் வசனக் காட்சிகளில் தியேட்டரில் ஆங்காங்கே கிண்டலும் கேலியும். பாடல் காட்சிகளில் பலர் வெளியேறிச் செல்வதையும், அமர்ந்திருப்பவர்கள் செல்போனில் பேசிக்கொள்வதையும் பார்க்க முடிகிறது. வசனங்களில் கையாளப்பட்ட கவனம் பாடல்களில் தவறி இருக்கிறது. படத்துடன் பாடல்கள் ஒட்டவேயில்லை. படத்தில் சில இடங்களில் வசனங்களைக் கூர்ந்து கவனிக்க விடாமல் காட்சிகளின் பிரம்மாண்டம் முந்திக்கொள்கிறது. அதேபோல சில லாஜிக் மீறல்களையும் அதுவே சமன்படுத்தி விடுவதை உணர முடிகிறது.
ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட பல புராணக்கதைகளுக்கு மூலக்கருவாகப் பெண்ணே இருப்பதை இந்தப் படத்திலும் நினைவூட்டியிருக்கிறார் இயக்குனர். முதல்பாதியில் ரம்யாகிருஷ்ணனின் ஆதிக்கத்தைப் போல இரண்டாம் பாதியில் அனுஷ்கா களமாடியிருப்பார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. விமர்சனங்கள், சிறு குறைகள், லாஜிக் மீறல்கள் அனைத்தும் படத்தின் இரண்டாம் பாதியில் சரிசெய்யப்படும் என்று தோன்றுகிறது.
மொத்தத்தில் “பாகுபலி” – பிரம்மாண்ட “பலசாலி” (மற்றபடி அவரவர் நாக்கு அவரவர் ருசி)
************************************************************************************************
(டிஸ்கி :படம் முடிந்து வெளியே வரும்போது காதில் விழுந்த உரையாடல்கள் ...
”புது டைரக்டரா”
”இல்ல ...”ஈ”ய வச்சு ஒரு படம் வந்திச்சே.... ஜீவாவும், நயன்தாராவும் நடிச்ச படம்...அந்த டைரக்டராம்”
......................................................................................................................................
“டைரக்டர் பேரு என்ன?”
“பேரு என்னவோ வருமே...ஆங்ங்ங் ....சந்திரமவுலி”
.........................................................................................................................
“ஹீரோ யாரு”
“சிரஞ்சீவி மகனாம்”
......................................................................................................................................
”தமிழ்ல எந்த ஹீரோ நடிச்சா நல்லாருக்கும்”
“வேற யாரு விஜய் தான்”
” …..(கெட்ட வார்த்தை) இதுக்கு அவரு படமே எடுக்க வேண்டாம்டா

2 comments:

  1. அவ்வப்போது சிரிப்போடு குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லவும் முடியவில்லை... அவர்களை ஏமாற்றவும் முடியவில்லை...!

    ReplyDelete
  2. விமர்சனம் நல்லா இருக்கு, நீங்க நெனச்சதை அப்படியே சொல்லிட்டீங்க.

    ~கட்டப்பா பாத்திரத்தில் நம்ம நெட்டப்பா~

    ~ (மற்றபடி அவரவர் நாக்கு அவரவர் ருசி)~

    கடைசில வர்ற எண்டிங் வழக்கம்போல பின்னீட்டீங்க...

    ReplyDelete